(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 10. போற்றிப் பஃறொடை
போற்றிப் பஃறொடை. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூல் பா (பஃறொடை வெண்பா) அமைப்பில் பெயர்பெற்ற நூலாகும். தொடை என்பது இரண்டு அடிகளைக் கொண்டது. இந்நூலில் வரும் பாடல்கள் இரண்டு அடிகளைக் கொண்டதால் பஃறொடை எனவும் ஆசிரியர் தனது குருவைச் சிவப்பரம் பொருளாக எண்ணிப் போற்றிப் பாடியதால் போற்றிப் பஃறொடை எனப் பெயர் வழங்கப் பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பாடல் ஒரே பாடலாக அமைந்திருந்தாலும் 14 இடங்களில் போற்றி என்ற சொல் வருவதால் 14 தலைப்பின் கீழ் இதன் உரை அமைந்துள்ளது. இதன் பாடலைப் பார்ப்போம்
“பூமன்னு நான்முகத்தோன் புத்தேளிர் ஆங்கவர்க்கோன்
மாமன்னு சோதி மணிமார்பன் – நாமன்னும்
வேதம்வே தாந்தம் விளக்கம்செய் விந்துவுடன்
நாதம்நா தாந்தம் நடுவேதம் – போதத்தால்
ஆம்அளவும் தேட அளவிறந்த அப்பாலைச்
சேம ஒளிஎவருந் தேரும்வகை – மாமணிசூழ்
மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலை போற்றி.
இதன் பொருள், தாமரை மலரில் நான்கு முகங்களுடன் விளங்குகின்ற பிரமனும், தேவர்களும் அவர்களின் தலைவனான இந்திரனும், திருமகள் இடம்பெற்ற மார்பில் ஒளிமிக்க கௌத்துவ மணியை அணிந்துள்ள திருமாலும், நாவினால் ஓதப்படுகின்ற வேதங்களும், வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், அறிவுக்கு விளக்கத்தைத் தரும் விந்துவும், அதற்கு ஆதாரமாய் விளங்கும் நாதமும், அதன் முடிவாகத் திகழும் சிவதத்துவமும், தங்களுடைய அறிவால் தேட அவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டதாய் விளங்குகின்ற – சிவபரம்பொருள் உயிர்களை உய்விக்க வேண்டும் என்ற கருணையினால் தன்னை வணங்குகின்றவர்கள் அனைவருக்கும் பேரின்பத்தை வழங்குவதற்காகத் திருச்சிற்றம்பலத்துள் நிறைந்து நின்று உயிர்களின் பிறவிப்பிணியை அறுப்பதற்காக திருநடனம் இயற்றும் நிலையை வணங்குகிறேன்.
2. இறைவனின் தொழில்
- குன்றாத
பல்லுயிர் வெவ்வேறு படைத்தும் அவைகாத்தும்
எல்லை இளைப்பொழிய விட்டுவைத்தும் – தொல்லையுறும்
அந்தம் அடிநடுஎன்று எண்ண அளவிறந்து
வந்த பெரியவழி போற்றி.
இதன் பொருள், எண்ணற்ற உயிர்களை அவற்றின் வினைக்கு ஏற்ப வெவ்வேறு வகையாகப் படைத்தும், அவற்றைக் காத்தும், பிறந்து இறந்து வரும் உயிர்களை ஒருகால எல்லையில் இளைப்பாறுவதற்காக ஒடுக்கியும் ஆகிய தொழிலைச் செய்து, தொன்று தொட்டுவரும் கால எல்லைக்கு அப்பாற்பட்டு நிற்பதால் முதல் நடு இறுதி என்று எண்ணுவதற்கு அரிதாய், அவற்றின் அளவுகளைக் கடந்து நிற்கின்ற பரம்பொருளின் பெருமைக்குரிய செயலை வணங்குகின்றேன்.
3. உயிர்களின் நிலைகள் (மூவவத்தைகள்)
- முந்துற்ற
நெல்லுக்கு உமிதவிடு நீடுசெம்பில் காளிதமும்
தொல்லை கடல் தோன்றத் தோன்றவரும் – எல்லாம்
ஒருபுடை ஒப்பாய்த்தான் உள்ளவா றுண்டாம்
அருவமாய் எவ்வுயிரும் ஆர்த்தே – உருவுடைய
மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்
தானடக்கும் காட்டத் தகுதியும்போல் – ஞானத்தின்
கண்ணை மறைத்த கடியதொழில் ஆணவத்தால்
எண்ணும் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும் – உள்நாடிக்
கட்புலனால் காணார்தம் கைக்கொடுத்த கோலேபோல்
பொற்புடைய மாயை புணர்ப்பின்கண் – முற்பால்
தனுகரணமும் புவனமும் தந்து அவற்றால்
மனமுதலால் வந்த விகாரத்தால் – வினையிரண்டும்
காட்டி அதனால் பிறப்பாக்கிக் கைக்கொண்டு
மீட்டறிவு காட்டும் வினைபோற்றி.
இதன் பொருள், நெல்லுக்கு உமியும் தவிடும், செம்பில் களிம்பும், கடல் நீரில் உப்பும் உடனாய் இருப்பது போல, தானும் உயிரோடு கலந்து இருக்கும். என்றாலும் இங்கு கூறப்பட்ட உவமைகள் எல்லாம் ஒரு புடை ஒப்புமையாக நிற்க, தான் என்றும் நிலைபேறு உடையதாய் நிற்கும், வடிவற்றதாய் நிற்கும், எல்லா உயிர்களையும் தனக்குள் அடக்கும் தன்மை உடையதாய் இருக்கும், இத்தகைய தன்மைகளை உடையது ஆணவம். மேலும் அது மணியைத் தன்னுள் அடக்கி இருக்கும் பாம்பினைப் போலவும், நெருப்பைத் தன்னுள் அடக்கியிருக்கும் விறகினைப் போலவும், உயிர்களின் அறிவினை முற்றிலும் மறைத்து நின்று, உயிர்களுக்கு அறியாமையைத் தருகின்றது. இத்தகைய ஆணவ மலத்தால் எல்லா உயிர்களும் செயல் இழந்து கிடக்கின்றன.
இவ்வாறு கிடக்கும் உயிர்களுக்கு உதவுவதற்காக – கண்ணற்ற குருடருக்குக் கோல் கொடுத்து உதவுவது போல, மாயையைக் கூட்டுவித்து அதன் மூலம் உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருட்களைத் தந்து நல்வினை, தீவினைப் பயன்களைப் பொருத்தி வினைப்பயனை நுகர்வதற்காகப் பல பிறப்புக்களையும் தந்து, அதனால் மல நீக்கத்தைச் செய்து, பக்குவம் பெற்றிருக்கின்ற உயிர்களுக்கு எல்லையற்ற தன் பேரின்பத்தைத் தந்தருளுகின்ற இறைவனின் கருணைச் செயலை வணங்குகின்றேன்.