(நாகேந்திரம் கருணாநிதி)
நவதரு பேதம்
இறைவன் ஒவ்வொரு திருமேனிகளுக்கும் ஒவ்வொரு சக்திகளையும் தோற்றுவிக்கிறான். அவையாவன 1.சிவம், 2.சக்தி, 3.நாதம் 4.விந்து, 5.சதாசிவன் – மனோன்மணி, 6.மகேசன் – மகேசை, 7.உருத்திரன் – உமை, 8.திருமால் – திருமகள், 9.அயன் – கலைமகள்.
சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 165 இல்
“சத்தியாய் விந்து சத்தியாய் மனோன்மணி தானாகி
ஒத்துறும் மகேசை ஆகி உமை திரு வாணி ஆகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சக்தி ஒருத்தியாகும்
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.”
அதாவது நவந்தரும் சிவவடிவங்களுக்கு ஒத்த சக்தி வடிவங்களும் ஒன்பது ஆகும். அவை சிவம், சக்தி, நாதம், விந்து, மனோன்மணி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் என்பனவகும். இவை ஒன்பது ஆயினும் அனைத்தும் சிவசக்தியின் வடிவங்களே. சிவபெருமான் ஒன்பது வடிவங்களைக் கொண்டு எவ்வாறு இந்த உலகை நடத்தி வருகின்றானோ அவன் திறத்திற்கு ஏற்ப அவனுக்குத் துணையாய் நின்று சக்திகளும் நடத்தி வருகிறார்கள்.
மாணிக்கவாசகர் திருவுந்தியார் பாடல் எண் 17 இல்
“பாலகனார்க்கு அன்று பால்கடல் ஈர்ந்திட்ட
கோலம் சடையார்க்கே உந்தீபற
குமரன் தன்தாதைக்கே உந்தீபற”
இப்பாடல் உயிர்கள் மேல் இறைவன் பொழியும் அளப்பரிய கருணையையும், அக்கருணையினால் அதோமுகம் காட்டி ஆணவத்தை அழிக்கத் திருமுருகனாகத் திருக்கோலம் காட்டியதையும் கூறுகிறது.
சிவம் இல்லையேல்ச் சக்தி இல்லை, சக்தி இல்லையேல்ச் சிவன் இல்லை என்பதை சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 239 இல்
“அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித்
தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்.”
அருள் எனப்படுவது இறைவனின் சத்தியாகும். சத்தியிலிருந்து சிவம் பிரித்து அறியப்படுவதில்லை. சிவத்திற்கு வேறாகச் சத்தியில்லை. அந்தச் சிவம் கண்களில் இருளைத் தன் ஒளியால் ஓட்டும் சூரியனைப் போல, உயிர்களின் அறிவை மறைக்கும் மலமயக்கத்தைத் தனது அருளாலே நீக்கி முத்தியைக் கொடுப்பான்.
சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 61 இல்
“மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவம் ஆகும்
ஆய ஆணவம் அகன்ற அறிவொடு தொழிலை ஆக்கும்
நாயகன் எல்லா ஞானத்தொழில் முதல் நண்ணலாலே
காயமோ மாயை அன்று காண்பது சத்தி தன்னால்.”
இறைவன் விருப்பு, வெறுப்பு அற்றவன். உயிர்களுக்கு அறிவு விளக்கம் செய்வதற்கு அவன் கீழ் இறங்கி வராமல், ஐந்து தொழில்களையும் தான் நேரடியாகச் செய்யாமல் தன் குணங்களாகிய அருளைக்கொண்டு செய்கிறான். இவ்வுண்மையை சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 65 இல்
“குறித்தது ஒன்றாக மாட்டாக் குறைவு இலன் ஆதலாலும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பு ஒருவிருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும்
நிறுத்திடும் நினைந்த மேனி நில்மலன் அருளி னாலே.”
தான் நினைந்த வடிவத்தை எடுத்துக் கொள்ள முடியாத குறைபாடு இல்லாதவன். நிறைந்த ஞானமும் செயலும் உடையவன். வெறுப்பு விருப்பு தன்னிடத்தில் பொருந்துதல் இல்லாத மலமற்றவன். உயிர்கள் மாட்டு வைத்த அன்பினால் தான் நினைத்த வடிவத்தை எடுத்துக் கொள்ளக் கூடியவன். எனவே அவனுடைய வடிவம் அருவம் என்று கூறுதல் பொருந்தாது.
இறைவன் எண் குணங்களை உடையவன். இதையே உபநிடதங்களில் சச்சிதானந்தம் எனக் கூறப்பட்டுள்ளது. அவையாவன 1.தன்வயம் உடமை, 2.தூய உடம்பு உடமை, 3.இயற்கை உணர்வு உடமை, 4.முற்றுணர்வு உடமை, 5.இயல்பாகவே பாசம் இன்மை, 6.பேரருள் உடமை, 7.முடிவில் ஆற்றல் உடமை, 8.வரம்பில் இன்பம் உடமை.
இவற்றை நெஞ்சு விடு தூது பாடல் எண் 100 இலிருந்து 106 வரை
“எட்டானை யார்க்கும் எழுதா இயற்குணங்கள்
எட்டானை ஆற்றா எழுத்தினான் – மட்டாரும்
பாடலார் ஆடலார் பண்பலார் நண்பலார்
ஆடலார் ஆடல் அகன்பதியாம் – கூடலார்
காணக் கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர்க்கு இலகு பலகையிட்டான் – சேணில்
சிறந்த உருவான் திருமாலுக்கு எட்டான்
நிறைந்த திருவுருவில் நிற்போன் – கறங்குடனே
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்டமெனு
மாறு கருணையினால் மாற்றினான் – நீறணிந்த
மெய்யன் நிமலன் அமலன்அருள் வீடளிக்கும்
ஐயன் அறிவுக்குஅறி வாயினான் – பொய்யர்பால்
பொய்ம்மையாய் நின்றான் புரிந்தவர்தம் நெஞ்சத்து
மெய்ம்மையாய் நின்று விளங்கினான்.” எனவும்
திருக்குறள் பாடல் எண் 9 இல்
“கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தளை.” எனவும்
திருமுறைகளில் பல இடங்களிலும் கூறப்பட்டுள்ளது.
தொடரும். . .