
(நாகேந்திரம் கருணாநிதி)
1. பதி ( இறைவன் )
இறைவன் உயிர்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பது பொது இயல்பாகும். சச்சிதானந்தமாய் நிற்பதுசிறப்பியல்பாகும்.
சிவப்பிரகாசம் பாடல் எண் 14 இல்
நிறைகிரியை தரஅதனை நிமலன் மேவி
நாடறிய கருணைத்திரு உருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து ஆதி
கூடும்ஒளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தநுகரண புவன போகம்
பீடுபெற நிறுவிஅவை ஒடுக்கும் மேனி
பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.”
உயிர்கள் மேல் கொண்ட கருணையினால் இறைவன் உயிர்களுக்கு அருள்வதற்காகத் திருமேனிகள் தாங்கும் இறைவனின் தடத்த இலக்கணத்தை (பொது இயல்பு) விளக்கப்படுகிறது. நிலைபெற்ற சிவசக்தி ஆனவள் இச்சா சக்தி, ஞானா சக்தி, கிரியா சக்திகளைத்தர, அந்தச் சக்திகளை மலமற்றவனாகிய சிவன் பொருந்தி, அச்சக்தியாகிய திருவருளே திருமேனியாகக் கொண்டு நாதம், விந்து தத்துவங்கள் கூடுகின்ற ஒளி பொருந்திய சுத்த மாயையைப் பொருந்தி வேதம், ஆகமம் முதலிய பல கலைகளையும் அருளிச் செய்து அசுத்த மாயை, பிரகிருதி மாயைகளில் கொடிய வினைகளைக் கொண்டிருக்கின்ற தனு, கரண, புவன போகங்களைப் படைத்து, காத்து அவற்றை தோன்றிய முறையிலேயே ஒடுக்கி நிட்களம் (அருவம்), நிட்களசகளம் (அருவுருவம்), சகளம் (உருவம்) என்னும் தன்மைகளை உடையதாய் விளங்குவான் இறைவன் என்பது மேற்படி பாட்டின் பொருளாகும்.
சிவப்பிரகாசம் பாடல் எண் 13 இல்
“பலகலையா கமவேதம் யாவையினும் கருத்துப்
பதிபசுபா சம்தெரித்தல் பதிபரமே யதுதான்
நிலவும்அரு உருவின்றி குணம்குறிகள் இன்றி
நின்மலமாய் ஏகமாய் நித்தம் ஆகி
அலகிலுயிர்க்கு உணர்வாகி அசலம் ஆகி
அகண்டிதமாய் ஆனந்த உருவாய் அன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவம்என்பர் தெளிந்து ளோரே.”
இப்பாடல் பதியாகிய சிவம் சச்சிதானந்தமாய் விளங்குவது என்று அதன் சொரூப இலக்கணத்தை உணர்த்தியுள்ளது. வேதம், அவற்றின் வழி நூல், சார்பு நூல் ஆகிய எல்லா நூல்களின் கருத்து பதி, பசு, பாசம் என்னும் முப்பொருட்களின் இயல்பைத் தெரிவித்தலாகும். அவற்றுள் பதி என்னும் இறைவன் ஏனைய இரண்டிற்கும் மேலானதாகும். இறைவன் அருவமும், உருவமும் அல்லாததாய், குணமும், குறிகளும் இல்லாததாய், மலத்தில்ப் பொருந்தாததாய், ஏகமாய், அழிவில்லாததாய், அளவற்ற உயிர்களின் அறிவுக்கு அறிவாய், சலனம் அற்றதாய், கண்டிக்கப்படாததாய், ஆனந்தமே வடிவாய், சென்றடைய அரியதாய், வழிபட்டவர்கள் சென்றடையும் முத்தியாய், அணுவிற்கு அணுவாய், எல்லாவற்றிற்கும் பெரிதாய் விளங்குவதாம் அவ்இறைவனை அறிவால்த் தெளிந்தோர் சிவம் என்று சொல்வர்.
இவ்வுலகத்தைத் தோற்றுவிக்கவும், நிலைநிறுத்தவும், அழிக்கவும் ஒரு பொருள் இருக்கவேண்டும். அத்துடன் அப்பொருள் வேறு ஒரு பொருளாலும் இயக்கப்படாததாயும், தோற்றம், இறுதி அற்றதாயும், என்றும் உள்ளதாயும் இருக்கவேண்டும். அப்பொருளையே சைவசித்தாந்தம் பதி (இறைவன் அல்லது கடவுள்) எனக் கூறுகிறது.
சிவஞானசித்தியார் சுப பக்கம் பாடல் எண் 24 இல்
“நிலம் புனல் அனல் கால் காண நிறுத்திடும் அழிக்கும் ஆக்கும்
பலம் தரும் ஒருவன் இங்குப் பண்ணிட வேண்டா எனின்
இலங்கிய தோற்றம் நிற்றல் ஈறு இவை இசைதலாலே
நலங்கிளர் தோற்றம் நாசம் தனக்கிலா நாதன் வேண்டும்”
அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களும் நாம் காணும்படி உலகத்தைத் தோற்றி, நிறுத்தி, அழித்தலாகிய தொழில்களைச் செய்வதால், உலகத்தைத் தோற்றுவிக்க இறைவன் தேவையில்லை என்று கூறினால் அந்த நான்கு பூதங்களும் தனித்தனியே தோன்றி, நின்று, அழிதலாகிய முத்தொழிலுக்கு உட்பட்டுக் காணப்படுகின்றன. ஆகையால் இந்நான்கு பூதங்களும் கூடி மற்றப் பொருட்களைத் தோற்றுவிக்கின்றன என்று கூறுவது பொருந்தாது. ஆதலால் உலகத்தைத் தோற்றுவிக்க இம்முத் தொழிலுக்கும் உட்படுதல் இல்லாத மேம்பாட்டினை உடைய இறைவன் வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.
திருக்களிற்றுப் படியார் பாடல் எண் 1 இல்
“அம்மையப்ப ரேஉலகிற்கு அம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.”
அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் உலகத்திற்குக் காரணம் என்று அறிக. அம்மையப்பராகிய சிவபெருமானே சக்தியின் வழியாக அருள் தந்து முத்தியைக் கொடுப்பார். அம்மையப்பர் உலகப்பொருள்கள் எல்லாவற்றிலும் கலந்திருந்தாலும் அவற்றின் தன்மைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் ஆவார். அதேநேரத்தில் பொருளோடு கலவாதவரைப் போலவும் காட்சி தருவார்.
சுட்டி அறிவதாகிய பிரபஞ்சம் சுட்டி அறியப்படாத சங்கார கருத்தாவின் வசப்பட்டுத் தோன்றி நின்று அழியுமே தவிரத் தானே தோன்றி நின்று அழியாது. ஆதலால் சங்கார காரணன் ஒருவனே உலகிற்கு முதற் கடவுள் என்பதை
சிவஞானபோதம் முதற்சூத்திரம் 3 ஆம் அதிகரணம்
“ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவாறு
ஒன்றலவா ஒன்றிலவை ஈறாதல் – ஒன்றலா
ஈறே முதலதனின் ஈறலா ஒன்றுபல
வாறே தொழும்பாகும் அங்கு.” எனக் கூறுகிறது.
தொடரும்.....