(நாகேந்திரம் கருணாநிதி)
7.ஆலய விக்கிரகங்களின் தத்துவம்
3. பராசக்தி. இறைவன் (சிவம்) ஆன்மாக்களின் மேல் கொண்ட கருணையினால் ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு தான் செயல்ப்படுவதற்காகச் சக்தியாகத் திருமேனி கொள்கிறான். இதை திருக்களிற்றுப் படியார் பாடல் எண் 1 இல்
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்”
எனக் கூறியுள்ளார்.
இக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பதுபோல இந்தியாவில் பின் வரும் இடங்களில் லிங்க வடிவில் பராசக்தி காணப்படுகிறாள். 1.தமிழகத்தில் மயிலாடுதுறையில் அனவித்யா எனவும், 2.படவேட்டில் ரேணுகாபரமேஸ்வரியாகவும், 3.கொங்குநாட்டில் பன்னாரிஅம்மனாகவும், 4.கர்நாடகத்தில் மிக முக்கிய சக்தி பீடமாகத் திகழும் (அர்த்தநாரி பீடம்) கொல்லூரில் மூகாம்பிகை எனவும், 5.மங்களூரில் கடில்துர்க்காபரமேஸ்வரி எனவும், 6.உத்தரப்பரதேசத்தில் நைமிசாரண்யத்தில் லிங்க தாரணி எனவும் நிலைபெற்றுள்ளாள்.
இறைவன் (சிவம்) தான் கொண்ட திருமேனியாகிய பராசக்திக்கூடாக முத்தொழிலையும் புரிவதற்காக பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக திருமேனி கொள்கிறான். இதைத் திருமந்திரம் பாடல் எண் 401 இல்
“அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.” எனவும்
திருமந்திரம் பாடல் எண் 402 இல்
“வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி யானவம் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.” எனவும் கூறப்பட்டுள்ளது.
பராசக்தி உருவ வழிபாட்டில் மட்டும் அல்லாமல் அருவுருவமாகவும் வழிபடப்படுகின்றாள். அதாவது யந்திர வழிபாடும், ஸ்ரீசக்கர வழிபாடும் ஆகும். இதை மேற்கூறிய முதல் பாடல் விளக்குகிறது.
இருக்கு வேதம் தேவீ சூக்தம் தேவீ, தானே எல்லாமாய் இருந்து உலகைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருள் புரிவதை தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது. அதர்வண வேதம் பராசக்தியின் ஆற்றலை விளக்கிக் கூறுகிறது. யஜுர் வேதம் பராசக்தியின் பல வடிவங்களை வர்ணிக்கின்றது.
பராசக்தி மூலமே இவ் உலக இயக்கம் எல்லாம் நடைபெறுவதால் சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சாக்தம் என்னும் சமயம் தோன்றியது. பிற்காலத்தில் இச்சமயத்தைப் பின்பற்றும் பலர் சைவசமயத்துடன் ஐக்கியமாகிவிட்டனர்.
பராசக்தி சிவத்துடன் சக்தியாகவும், நாதத்துடன் விந்தாகவும், சதாசிவனுடன் மனோன்மணியாகவும், மகேசனுடன் மகேசையாகவும், உருத்திரனுடன் உமையாகவும், திருமாலுடன் திருமகளாகவும், அயனுடன் கலைமகளாகவும் தோற்றமளிக்கிறாள்,
இவ்வுண்மையை சிவஞானசித்தியார் சுப்பக்கம் பாடல் எண் 165 இல்
“சத்தியாய் விந்து சத்தியாய் மனோன்மணி தானாகி
ஒத்துறும் மகேசை ஆகி உமை திரு வாணி ஆகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙனம் வரும் சத்தி ஒருத்தியாகும்
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.” எனக் கூறப்பட்டுள்ளது
இதை பின் வரும் திருமந்திரம் பாடல் எண் 402 இலும் வலியுறுத்தப்படுகின்றது.
“வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி யானவம் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.”
மேலும் பராசக்தி 51 சக்தி பீடத்திலும் வெவ்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படுகிறாள். சிதம்பரத்தில் சிவகாமி, திருவேற்காட்டில் கருமாரி, சமயபுரத்தில் மாரிஅம்மன் எனவும், பரமேஸ்வரனுடன் பார்வதி ஆகவும், தட்சாயினி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி எனவும் அவளின் நாமங்கள் தொடர்கின்றன.,
பராசக்தியின் 51 சக்திபீடங்கள் இந்தியாவில் தமிழ்நாடு 1.காஞ்சிபுரம் (காமகோடி பீடம்) காமாக்ஷி, 2.மதுரை (மந்த்ரிணீ பீடம், மனோன்மணி பீடம்) மீனாக்ஷி (மந்த்ரிணீ, இராஜமாதங்கி) 3.திருஆனைக்கா (தண்டினீ பீடம், ஞானபீடம்) அகிலாண்டேஸ்வரி (மஹாவாராகி, ஸ்ரீதேவி, தண்டநாதா) 4.ராமேஸ்வரம் (ஸேது பீடம்) பர்வதவர்த்தினி, 5.பாபநாசம் (விமலா பீடம்) விமலை (உலகநாயகி), 6.திருவாரூர் (கமலை பீடம்) கமலாம்பாள், 7.கன்யாகுமரி (குமாரி பீடம்) குமாரி, 8.திருவையாறு (தர்ம பீடம்) தர்மஸம்வர்த்தினி, 9.திருவண்ணாமலை (அருண பீடம்) அபீதகுசாம்பாள், 10.திருக்கடவூர் (கால பீடம்) (அஸ்டவீரட்டானம்) அபிராமி, 11.திருக்குற்றாலம் (பராசக்தி பீடம், யோகபீடம்) பராசக்தி, 12.கும்பகோணம் (மந்திர சக்தி பீடம்) ஸ்ரீமங்களாம்பிகை, 13.தேவிப்பட்டினம் (வீரசக்தி பீடம்) மகிஷமர்த்தினி, 14.திருவெண்காடு (ப்ரணவ பீடம்) ப்ருஹ்ம வித்யா, 15.திருநெல்வேலி (காந்தி பீடம்) காந்திமதி, 16.திருவொற்றியூர் (இக்ஷ பீடம்) திரிபுரசுந்தரி, 17.திருவாலங்காடு (காளி பீடம்) மகாகாளி, 18.ஈங்கோய்மலை(திருச்சி) (சாயா பீடம்) ல்லிதா கேரளா 19.நந்திபுரம் (கல்யாணி பீடம், பகவதி பீடம்) நந்தினி (ஹேமாம்பிகை) கர்நாடகா 20.கொல்லூர் (அர்த்தநாரி பீடம்) மூகாம்பிகை, 21.மைசூர் (சம்ப்ரதாய பீடம்) சாமுண்டி, 22.கோகர்ணம் (கர்ண பீடம்) பத்ரகர்ணி, ஆந்திரா 23.காளகஸ்த்தி (ஞான பீடம்) ஞானப்ரஸுந்தாம்பிகை, 24.த்ராக்ஷாராமா (மாணிக்க பீடம்) மாணிக்காம்பாள், 25.ஸ்ரீசைலம் (ஸ்ரீசைல பீடம்) பிரமராம்பாள், மகராஷ்டிரம் (மும்பை) 26. கோலாப்பூர் (கரவீர பீடம்) மஹாலஷ்மி, 27.த்ரியம்பகம் (திரிகோண பீடம்) த்ரியம்பகதேவி, 28.துள்ஜாபுரம் (உத்பலா பீடம்) பவானி, ஒரிசா 29. பூரி (பைரவி பீடம்) பைரவி, குஜராத் 30.ஸோமநாதம் (ப்ரபாஸர பீடம்) சந்திரபாகா, 31.அம்பாஜி (பிருந்தாவனம்) (துவாரகை) (முத்தி பீடம்) குமாரி (பத்ரகாளி), ம.பி. 32.மஹாகாளம் (மஹோத்பலா பீடம்) சங்கரி, 33.உஜ்ஜயனி (ருத்ராணி பீடம்) மஹாகாளி, ராஜஸ்தான் 34.புஷ்கரம் (காயத்ரீ பீடம்) காயத்ரி, உ.பி. 35.காசி (மணிகர்ணிகா பீடம்) விசாலாஷி, 36.வைதரணி (விரஜா பீடம்) விரஜை, மே.வ. 37.கல்கத்தா (உக்ரசக்தி பீடம்) காளி, பீகார் 38.கயா (திரிவேணி பீடம்) மந்திரிணி, பஞ்சாப் 39.ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) திரிபுரமாலினி, ஹரியானா 40.ஹஸ்திணாபுரம் (ஜெயந்தி பீடம்) முக்திநாயகி, 41.குருக்ஷேத்ரம் (உபதேச பீடம்) ஸ்தாணுப்பிரியை, இ.பி. 42.நாகுலம் (தேவிகா தடம்) (உட்டியாண பீடம்) நகுலேஸ்வரி, 43.ருத்ரகோடி (கேதாரம்) (ருத்ரசக்தி பீடம்) மார்க்கதாயினி (கௌரி), 44.நீலபர்வதம் (சிம்லா) (ச்யாமளா பீடம்) நீலாம்பிகை, 45.ப்ரயாகை (ப்ரயாகை பீடம்) லலிதா, அஸ்ஸாம் 46.காமரூபம் (காமகிரி பீடம்) காமரூபிணி, மிர்ஜாப்பூர் 47.விந்தியாசலம் (விந்தியாசல பீடம்) நந்தாதேவி, காஷ்மீர் 48.ஸ்ரீநகர் (ஜ்வாலாமுகி பீடம்) ஜம்புநாதேஸ்வரி, 49.அம்பத்தூர் (வைஷ்ணவி பீடம்) வைஷ்ணவி, நேபாளம் 50.பசுபதி – காட்மாண்ட் (சக்தி பீடம்) பவானி, திபெத் 51.மானஸரொவர் (த்யாக பீடம்) தாக்ஷாயனி.
சக்தி பீடங்கள் 51 உடன் வேறு சிலவும் சேர்ந்து 64 ஆகவும் அத்துடன் இன்னும் சில சேர்ந்து 108 உம் கூட உள்ளது எனவும் கூறுவர்.
தொடரும்.......