
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
தீபாவளி இந்துசமயத்தவரால் கொண்டாடப்படும் பட்டிகைகளில் ஒன்றாகும். தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை. வீடுகளில் உள்ள இருளை அகற்ற வரிசையாக விளக்கேற்றுதல் என்பது பொருளாகும். எமது மனதில் உள்ள இருளாகிய அக்கங்காரம், கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை எரித்துவிட்டு அன்பு, கனிவு, நல்ல சிந்தனை போன்ற நல்ல எண்ணங்களாகிய ஒளியை ஏற்றுதல் என்பது இதன் பொருளாகும். தீபாவளியன்று ஏற்றும் தீபம் “யமனை விரட்டும் யமதீபம்” என்று வாமண புராணம் கூறுகிறது.
தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் புராணங்களிலும், கதைகளாகவும் பல கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமானால்
1. சைவ சமயத்தவர்கள் சிவனால் பல்வேறு காலங்களில் பல்வேறு நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட 25 சிவ முகுர்த்தங்களில் ஒன்றான கஜமுகானுக்கிரக மூர்த்தியின் தோற்றம் நடந்த நாளை (நரக சதுர்த்தசி) தீபாவளி எனக் கொண்டாடுகிறார்கள்.
2. சக்தி தனது 21 நாள் கேதாரகௌரி விரதத்தை முடித்த பின்பு சிவன் சக்தியை தனது இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக மாறிய நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது என ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
3. திருப்பாற்கடலில் அமிர்தம் பெறுவதற்கு கடைந்தபொழுது இலட்சுமிதேவி தோன்றிய நாள், திருமாலை இலட்சுமிதேவி திருமணம் செய்த நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகின்றது.
4 கிருஷ்ணபரமாத்மா நரகாசுரனை அழித்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்ற அவனின் வேண்டுகோளுக்கமைய அந்நாள் தீபாவளி எனக் கொண்டாடப்படுகின்றது என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது
5. இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய அன்று மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அவரை வரவேற்ற நாள் தீபாவளியாகவும், வட இந்தியாவில் புதுவருடப் பிறப்பாகவும் கொண்டாடுகின்றனர். ஆனால் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127 ஆம் சர்க்கத்தில் இராமர் நாட்டிற்குத் திரும்பியது சித்திரை மாசத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும், அடுத்த நாளான சத்தமியில் முடி சூடினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
6. பாண்டவர் வனவாசம் முடிந்து பாரத யுத்தத்தில் வெற்றி பெற்று அத்தினாபுரம் மீண்ட நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகின்றது.
7. சந்திரகுப்த விக்கிரமாதித்த மகாராஜா முடி சூடிய நாளை தீபாவளி என்று கொண்டாடப்படுகின்றது.
8/. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் பரிநிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகின்றது.
9. ஜைனர்களின் குருவான மகாவீரர் வீடுபேறு அடைந்த நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகின்றது.
10. சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக் வீடுபேறு அடைந்த நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகின்றது.
11. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி வீடுபேறு அடைந்த நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகின்றது.
12. ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஸ்தாபித்தது ஒரு தீபாவளி தினத்திலாகும்.
13. சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிங் அவுரங்கசீப் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது ஒரு தீபாவளி தினத்திலாகும்.
14. இதேபோல் இதற்கு முந்திய சீக்கிய குருவான ஹார்கோபிந்த் சிங் ஜஹாங்கீர் மன்னனுடைய சிறையில் இருந்து விடுபட்ட நாள் கி.பி. 1619 ஆண்டின் தீபாவளி தினத்திலாகும்.
15. இந்தியாவில் அமிர்தசரஸில் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது கி.பி. 1577 ஆண்டின் தீபாவளி தினத்திலாகும். அன்று பொற்கோவில் விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
16. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் பாபர்.
17. அக்பர் தீபாவளிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதாக அவரின் அவைக்களப் புலவர் அபூல் பாஸல் தனது “அயினி அக்பர்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
18. வங்காளத்தில் தீபாவளியன்று காளி பூசை செய்து வழிபடுகின்றனர். அத்துடன் இளம் பெண்கள் தீபம் ஏற்றி ஆற்றில் விடுவார்கள்.
19. காசியில் வருடத்தில் தீபாவளியை ஒட்டி மூன்று நாட்கள் மட்டும் தங்க அன்னபூரணி தரிசனம் கிடைக்கும்.
20. நேபாளத்தில் ஐந்து நாட்கள் இரவில் தீபம் ஏற்றி “தீஹார்” எனத் தீபாவளி கொண்டாடப்படுகின்றது.
21. தீபாவளியை அரசுப்பண்டிகை ஆக்கியவர்கள் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகிய மொகலாயச் சக்கரவர்த்திகள் எனக் கூறப்படுகிறது.
22. வடநாட்டிலும் கிழக்காசியாவிலும் சிலர் தீபாவளிக்கு முதல் நாள் இலக்சுமி பூசையும், தீபாவளியன்று குபேர பூசையும் செய்து வழிவடுவார்கள்.
23. இந்தியாவில் பௌத்தர்களும், கிறீஸ்தவர்களும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.