இப்புத்தகங்கள் எமது வருங்காலச் சந்ததியினர் சமய அறிவைப் பெறுவதற்காக எழுதப்பட்டுள்ளன. நீங்கள் இப்புத்தகங்களைப் படிப்பதன் மூலம் சைவசமயத்தின் தத்துவங்களை சரியாகப் புரிந்துகொண்டு தேவையற்ற மதமாற்றங்களையும், வேஷம் போடும் போலிச் சுவாமிகளின் பின்னால்ச் செல்வதையும், முறையான சாஸ்த்திர அறிவற்றவர்கள் பணத்துக்காக கூறும் சாஸ்த்திரங்களை நம்புவதையும் தவிர்க்கலாம். புத்தகங்களைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால் “சைவ சித்தாந்தம் கைநூல்” என்னும் புத்தகத்தில் எமது சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கைகளான பதி , பசு , பாசம் என்பன பற்றியும், சைவசித்தாந்த சாஸ்த்திரங்கள் எனப்படும் 14 நூல்கள் பற்றியும் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. “சைவசமய வழிபாடும் விரதங்களும்” என்னும் புத்தகத்தில் சைவசமய வழிபாடு, ஆலயஅமைப்பு முறை, மற்றும் நாம் மேற்கொள்ளும் சமய விழாக்கள் மற்றும் விரதங்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. “திருமந்திரம் சில முத்துக்கள்” என்னும் நூலில் திருமந்திரத்தில் உள்ள 3048 பாடலில் 178 பாடல்களை மட்டும் எடுத்து திருமந்திரம் சமயம் கடந்து முழுக்க முழுக்க மனித வாழ்க்கையை முறையாகச் செம்மையாக வாழும் வழியினை கூறியிருப்பதை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. திருமந்திரத்தைப் படித்த ஔவையார் “தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும், மூவர் தமிழும் முனி மொழியும், கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர்” அதாவது திருக்குறள், நான்குவேதங்கள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் படைப்புக்கள், அகத்தியரின் நூல்கள், திருஞானக்கோவை, திருவாசகம் அனைத்தும் திருமூலரின் ஒரு வாசகத்திற்கு இணை எனக்கூறியுள்ளார்.
புத்தகங்களைப் பற்றி நான் கூறுவதை விட இப்புத்தங்களை வாசித்து அதற்கு ஆசியுரை, அணிந்துரைகளைத் தந்த எனது குரு மதிப்பிற்குரிய திரு பற்றிமாகரன், மதிப்புக்குரிய சிவாச்சாரியார்களான மகேஸ்வரக் குருக்கள், வசந்தன் குருக்கள், கமலநாதக் குருக்கள் ஆகியோருடன் சிவயோகம்இந்து கலாச்சார மையம், சைவமுன்னேற்றச் சங்கம் ஆகிய அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் கூறியுள்ளவற்றுடன் எனது உரையையும் புத்தகங்களின் ஆரம்பத்தில் நீங்கள் வாசித்து அறிந்துகொள்ளலாம். இப் புத்தகங்களை வாசித்துப் பயன் பெற விரும்புபவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை சித்திரைவருடப்பிறப்பன்று அருள் மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் (128, AURELIA ROAD, CROYDON, CR0 3BF) காலை 9.00 மணி, மதியம் 12.00 மணி, மாலை 7.30 மணிப் பூசைகளைத் தொடர்ந்து இலவசமாக இப்புத்தகங்களை பெற்றுச் செல்லலாம். நன்றி
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
|
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என திருமூலநாயனார் திருமந்திரத்தில் கூறியுள்ளார். காலத்திற்குக் காலம் இறைவன் சில ஆன்மாக்களைக் கொண்டு சில விடையங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான். “எண்ணமே வடிவம் எண்ணுவது நானல்ல” என்பது சைவசித்தாந்த தத்துவங்களில் ஒன்றாகும். இறைவன் சம்பந்தமாக நாம் அழுக்கற்ற தூயமனத்துடன் சிவசிந்தனையுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் இறைவனால்ச் செய்யப்படுகின்றது என்ற எமது முன்னோரின் கருத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும். இறைவன் என்னைச் சைவசித்தாந்தம், திருமந்திரம் இரண்டையும் படிக்க வைத்து பின்வரும் மூன்று புத்தகங்களை எழுதவைத்துள்ளான். “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலநாயனாரின் கூற்றுக்கு அமையவும், “சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” எனக் கூறும் தொல்காப்பியரின் கூற்றுக்கு அமையவும் இப்புத்தங்களை நீங்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் என நான் கருதுகின்றேன்.
0 Comments
Leave a Reply. |
என்னைப்பற்றிநாகேந்திரம் கருணாநிதி பதிவுகள்
June 2024
முழுப்பதிவுகள் |